மதுரை மாநகரில் 7 ஷேர் ஆட்டோக்கள் மட்டுமே வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக அனுமதி பெற்று செயல்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.
மதுரை மக்கள் தங்களது அன்றாடப் பணிகளுக்கு செல்ல பெரும்பாலும் பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் மதுரையில் 956 அரசு பேருந்துகளும் 300க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் இயங்கி வருகிறது.
இவை தவிர 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரையில் மொத்தம் எத்தனை ஆட்டோக்கள் இயங்குகின்றன என்பது உள்ளிட்ட தகவல்களை மதுரை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக வட்டாரத்தில் 1562 ஆட்டோக்கள் மற்றும் 6 ஷேர் ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக 573 ஆட்டோக்களும் ஒரு ஷேர் ஆட்டோவும் மதுரை வட்டார போக்குவரத்து அலுவலக பதிவு கணக்கில் 3 ஆயிரத்து 476 ஆட்டோவும் ஒரு ஷேர் ஆட்டோக்கு கூட அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மதுரை மாநகர் முழுவதும் மொத்தம் 12723 ஆட்டோக்கள் மற்றும் 7 ஷேர் ஆட்டோக்கள் மட்டுமே அனுமதி பெற்று இயங்குவதும் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் உரிய பதிவு மற்றும் அனுமதி இன்றி இயங்கி வருவதும் தெரியவந்தது. மோட்டார் வாகன விதி முறைகளை கடைபிடித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .இது தொடர்பாக தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷிடம் கேட்டபோது உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.