தொலைதூர கல்வி முறையில் சட்டப் படிப்பு படிக்கும் 50 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செய்முறை பயிற்சி வழங்க அபுதாபி நீதித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அபுதாபியில் சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் பயிற்சி மற்றும் படிப்பை மேம்படுத்த அபுதாபி நீதித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறது. அதன்படி அபுதாபி நீதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் முதல் அபுதாபி நீதித்துறை சார்பில் சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி முறையில் செய்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள தொழிலாளர் சந்தை நிறுவனம் மற்றும் வழக்கறிஞர் தேவை ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு நல்ல திறனுள்ள தகுதி வாய்ந்த சட்ட நிபுணர்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது . அதன்படி இந்த ஆண்டில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தொலைதூர கல்வி முறையில் சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் 50 பேருக்கு ஆன்லைன் மூலமாக செய்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த செய்முறை பயிற்சிகளில் சமரசம் மற்றும் நல்லிணக்க சட்ட குழுக்களில் பணியாற்றுவது , நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவது மற்றும் வழக்குகள் மூலம் சிறந்த அனுபவத்தை தருவது உட்பட பல பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் மூலமாக சமூகத்திற்கு சிறந்த சட்ட ஆலோசனைகளை அளிப்பதற்கும் , பல்கலைக்கழகங்களில் திறனுள்ள சட்ட நிபுணர்களை அதிக அளவில் உருவாக்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு இந்த தொலைதூர கல்வி முறையில் சட்டப் படிப்பு படிக்கும் 300 மாணவர்களுக்கு செய்முறை பயிற்சிகள் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டுள்ளது ‘ , என அதில் கூறப்பட்டுள்ளது.