சென்னை அருகே முன்னணி ஆன்லைன் நிறுவனத்தில் மொபைல் ஆர்டர் செய்த வாலிபர் ஏமாற்றம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பால் உலகமே வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும் இந்த சூழ்நிலையில், நேரடியாக ஷாப்பிங் செய்வதைவிட, முன்பை காட்டிலும் அதிகமாக ஆன்லைனில் ஷாப்பிங் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. இதை மையமாக வைத்து பல போலியான வலைதளங்கள் மக்களை ஏமாற்றி மோசடி செய்வதையும், இந்த லாக்டவுன் காலகட்டத்தில் வழக்கமாகக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில்,
சென்னையில் கோபால் என்பவர் முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனத்தில் ரூபாய் 17 ஆயிரத்து 499 மதிப்புள்ள மோட்டோ நிறுவன ஸ்மார்ட்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், டெலிவரி ஆன போது, அதில் இரண்டு துணி துவைக்கும் சோப் மட்டும் இருந்துள்ளது. இதுகுறித்து அவர் அனுப்பிய புகார்க்கும் அந்த நிறுவனம் சார்பில் சரியான பதில் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால்,
இதில் கவனிக்க கூடிய விஷயம் என்னவென்றால், பல மோசடியாளர்கள் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பெயரில் போலியான வலைதளங்கள் அவர்களது வலைதளங்கள் இருப்பதுபோலவே உருவாக்கி மோசடியில் சமீப காலமாக ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அதுபோன்ற போலியான வலைதளத்தில் ஏதும் இவர் தவறாக பொருள் ஆர்டர் செய்து விட்டாரா ? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.