ஒரு ஆண் ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சட்டப்படி ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். ஒரு ஆண் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தாலோ அல்லது தனது முதல் மனைவி இறந்து விட்டால் மட்டுமே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு. ஆனால் தற்போது இந்த சட்டத்தை மீறி பலதார திருமண நடைமுறை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதோடு இவ்வாறு நடைபெறும் திருமணங்கள் பெரும்பாலும் பெண்களின் சம்மதத்துடனே நடைபெறுகிறது. குறிப்பாக இரண்டு பெண்களை அவர்களின் சம்மதத்துடன் ஒரே சமயத்தில் ஒரு ஆண் திருமணம் செய்த நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை… அவர்களின் முழு சம்மதத்துடன் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் சந்து மயூரா என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் பழங்குடியின பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த பொழுது அவ்விருவர் வாழ்வில் இன்னொரு பெண் நுழைந்துவிட்டார். அதன்பின் மயூராவிற்கு அந்தப் பெண்ணுடனும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிக்க தொடங்கினார்கள்.
இதனையடுத்து இரண்டு பெண்களும் சந்து மயூராவின் வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை தவறாக பேசத் தொடங்கினார்கள். இதனால் முறைப்படி இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொள்ள அவர் முடிவு எடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரது கிராமத்தினர் முன்னிலையில் அவ்விரு பெண்களையும் ஒரே சமயத்தில் மயூரா திருமணம் செய்துகொண்டார். மேலும் இத்திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.