ஆம்னி பேருந்து-மினிலாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் மனோஜ்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஆம்னி பேருந்து டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மனோஜ் சென்னையில் இருந்து கம்பம் நோக்கி ஆம்னி பேருந்தை ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பாடி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே கம்பத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது.
அப்போது ஆம்னி பேருந்தும் மினி லாரியும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்து மற்றும் லாரியின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. மேலும் ஆம்னி பேருந்தை ஓட்டி வந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த நிலையில் அவரின் உதவியாளர் உமாசங்கர் மற்றும் மினி லாரி ஓட்டுனர் திருப்பூரை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆம்னி பேருந்தில் இருந்த 15 பேரும் எவ்வித காயங்கள் இன்றி உயிர்தப்பியுள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து சென்ற வீரபாண்டி காவல்துறையினர் மனோஜ்கண்ணனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மினி லாரி டிரைவர் விக்னேசும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.