தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் உலகம் முழுவதும் கால் பதித்து வரும் நிலையில் அமெரிக்காவை பதம்பார்க்கத் தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் வைரசுக்கு உலகளவில் முதல் பலியை இங்கிலாந்து பதிவு செய்து உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 6½ லட்சம் நபர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதியாகியுள்ளது. அமெரிக்காவிலும் ஒமிக்ரான் முதல் பலியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த ஒருவர் இந்த வைரசால் இறந்துள்ளார்.
இவ்வாறு இறந்தவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. மேலும் ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு ஆளானவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 213 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 77 பேர் குணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலார் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “கொரோனா தொற்று பரவல் 10 சதவீதத்துக்கு மேல் இருந்தால் அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.
டெல்டா வைரசை விடவும் ஒமிக்ரான் வகை கொரோனா 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் வசதி இருப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம். நாடு முழுவதிலும் 4 நாட்களில் ஒமிக்ரான் பரவல் இரட்டிப்பாகி உள்ள நிலையில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு” அவர் அறிவுறுத்தினார்.