ஒமைக்ரான் தொற்றினால் அதிகம் பேர் பாதிக்கப்படலாம் என்று பிரிட்டன் சுகாதரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றில் 44% ஓமைக்ரான் தான் அதிகமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் அடுத்த 48 மணி நேரத்தில் டெல்டா தொற்றை விட ஒமைக்ரான் அதிகளவு பரவலாம் என்று பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். மேலும் ஒமைக்ரான் தொற்றால் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக பிரிட்டனில் இதுவரை ஒமைக்ரான் தொற்று பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இரு தவணை தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் ஆவர்.
மேலும் ஒமைக்ரான் தொற்று குறித்து வரும் செய்திகளால் மக்கள் தடுப்பூசி மையங்களில் கூட்டம் கூட்டமாக தடுப்பூசி செலுத்துவதற்காக குவிந்துள்ளனர். குறிப்பாக தடுப்பூசி செலுத்துவதற்காக மக்கள் முந்தியடித்துக்கொண்டு முன்பதிவு செய்வதாகவும் பிரிட்டனின் மருத்துவ சேவைகள் துறை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.