சென்னை புரசைவாக்கம் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் உணவகமான டெக்கான்-ல் அப்பாஸ் என்பவர் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். மேலும் உணவக ஊழியர்கள் மட்டன் பிரியாணியை பரிமாற அப்பாஸ் உணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பிரியாணியில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பாஸ் ஹோட்டல் ஊழியர்களை அழைத்து பிரியாணியில் பல்லி கிடந்ததை காண்பித்து முறையிட்டுள்ளார்.
ஆனால் உணவக ஊழியர்கள் சரியாக பதில் அளிக்காமல் மருத்துவமனை அருகில் தான் உள்ளது அங்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து அப்பாஸ் பல்லி விழுந்த உணவு பொருளை சாப்பிட்டால் அது விஷமாக மாறும் தன்மை கொண்டது என்பதாலும், ஆரம்பித்தில் லேசாக வயிற்று வலி இருந்தாலும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அப்பாஸ், “வேலை சம்பந்தமாக புரசைவாக்கம் பகுதிக்கு சென்றிருந்தேன். அப்போது மதிய உணவு சாப்பிடுவதற்காக சரவணா ஸ்டோர்ஸ் அருகில் உள்ள டெக்கான் உணவகத்திற்கு சென்று அங்கு மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தேன்.
அப்போது பாதி பிரியாணி சாப்பிட்டு முடித்த பிறகு அதில் பல்லி கிடந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் உணவு ஊழியர்களை அழைத்து இது குறித்து கூறிய போது அவர்கள் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டனர். மேலும் சிறிது கூட மனிதாபிமானம் இல்லாமல் செயல்பட்டனர்” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.