சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை முதல்வர் சாந்திமலர் போன்றோர் முழு உடற்கவசம் அணிந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடமும், நோயாளிகளிடமும் கேட்டறிந்தனர். இதையடுத்து செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், “நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
தற்போது தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு 6 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் கண்டறியப்படுகிறது. இதில் தனி கவனம்ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மட்டுமே, 10 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு இருக்கிறது. கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள மேற்கு மாவட்டங்களான கோவை, தேனி, நாமக்கல், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.
அதே போன்று ஆந்திரா எல்லையில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும், சுற்றுலா தலமான நீலகிரி உள்ளிட்ட மாவட்டத்திலும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தற்போது, 1.30 லட்சம் படுக்கைகள் உள்ள நிலையில், 5,975 நபர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்று குறைந்து வருவதால் நோய் பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிப்பது இல்லை.
ஆகவே மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தால், மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும். மாநிலத்தில் 9.68 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டாம் தவணை காலம் முடிந்துள்ள 1.06 கோடி பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கின்றனர். ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தான், மூன்றாம் அலையில் உயிரிழப்பு அதிகளவில் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 2012ஆம் ஆண்டில் இருந்து புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வருடத்தில் 81 ஆயிரத்து 814 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டனர். அதில் 55 சதவீதம் பேர் பெண்கள், 45 சதவீதம் பேர் ஆண்கள் ஆவார்கள். இதில் பெண்கள் கர்ப்பப்பை, வாய் புற்றுநோயினால் அதிகமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்பின் ஆண்கள், வயிறு, வாய், நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்” என்று அவர் கூறினார்.