இந்தோனேசியாவில் உள்ள சியான்சூர் நகரில் கடந்த 20-ஆம் தேதி 5.6 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வகையில் கடந்த புதன்கிழமை காலை இடிபாடுகளில் சிக்கியவர்களில் மேலும் 90 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது. அதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 24 பேரை காணவில்லை என அந்த நாட்டு தேசிய பேரிடர் மீட்பு கழகம் கூறியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேஜர் ஜெனரல் சுஹர்யான்தோ கூறியதாவது, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் என உறுதி செய்துள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் 2,043 பேர் காயமடைந்தனர். மேலும் 56,320 வீடுகள் சேதமடைந்துள்ளது எனவும் அவற்றில் மூன்றில் ஒரு பங்கு வீடுகள் அதிக அளவில் மோசமடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிபர் ஜோகோ விடோடோ நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு வீடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகையும் அறிவித்துள்ளார். இருப்பினும் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.