கடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரத்தில் காணொளி மூலமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, நீட் என்னும் நுழைவுத்தேர்வு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது. எனவே நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் மீண்டும் வலுவான மசோதாவை நிறைவேற்றியுள்ளோம். இவர்களை இப்படியே விட்டால் பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரு நுழைவு தேர்வு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரு நுழைவு தேர்வு என கொண்டு வந்து விடுவார்கள். இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
அடிமைத்தனத்திற்கு பின்னால் செல்லாமல் எவ்வாறேனும் போராடி நீதியை நிலைநாட்டுவோம். தமிழ்நாட்டு மக்களுக்கு வெள்ள நிவாரண பணிகளை செய்வதற்காக 6500 கோடி ரூபாய் நிதி உதவியை ஒன்றிய அரசிடம் கேட்டோம். குழுவை அனுப்பி ஆய்வு செய்தனர் அதோடு சரி நிதி உதவி கிடைக்கவில்லை. ஏதோ தமிழில் நன்றி வணக்கம் போன்ற இரண்டு வார்த்தைகளை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா..? அவர்களும் நன்றி வணக்கம் எனக் கூறி அனுப்பி வைத்துவிடுவார்கள். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாத பாஜக அரசை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.