ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆட்சியருக்கு முன்னாள் மாநில பாஜக பிற்பட்டோர் அணி தலைவர் தலைமையில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் சீனாபுரம் பகுதியிலிருந்த சிவன் கோவிலையும், மூலவர் சிலை, நந்தி சிலை, அம்பாள் சிலை போன்றவைகளையும் காணவில்லை என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து பெருந்துறை தாசில்தார் கேட்டபோது இந்த கோவில் குறித்த அனைத்து தகவலும் சீனாபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள சிவன்கோயில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே பூஜை பரிகாரங்கள் எதுவும் இல்லாமல் நின்று விட்டது எனவும், இடிபாடுகளுடன் கிடந்த இந்த கோவிலின் வளாகத்தில் சுத்தம்செய்து நியாய விலை கடை ஒன்றை அப்போது இருந்த ஆட்சியாளர்கள் கட்டி கொடுத்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். மேலும் கோவில் நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து கோவிலுக்கு சொந்தமான அம்பாள் சிலை, நந்தி சிலை, மூலவர் சிலை என அனைத்து சிலைகளும் முருகன் கோவிலில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து சிவன் கோவில் காணவில்லை என்று மனுவில் குறிப்பிட்டு இருந்த அந்த நபரின் செயல் வடிவேலு பட பாணியில் உள்ளதால் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. மேலும் கோவிலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். சிவன் சொத்து குல நாசம் என்று ஈரோடு பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.