பயன்படாத பழைய டிவியை தெருநாய்களின் வீடாக மாற்றிய அசாம் மாநில இளைஞரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் டிவி என்பது பல வடிவமாக மாறியுள்ளது. எல்இடி டிவியின் வருகையால் பழைய டிவிகள் தற்போது ஒரு மூலையில் போடப்பட்டு வருகின்றன. இப்படி வீட்டில் இடத்தை அடைத்து கொண்டுள்ள பழைய டிவிகளின் மவுஸ் இல்லாமல் போனதற்கு புதிய தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம். பயன்படாத இந்த டிவிகளை எக்ஸ்சேஞ்ச் பண்ணமுடியாது. பாத்திரங்களுக்கு போட்டால் பேரிச்சம் பழம் கூட கிடைக்காத சூழல் ஆகியுள்ளது.
இதை வித்தியாசமாக யோசித்து ஒரு இளைஞர் அசத்தியுள்ளார். அபிஜித் என்ற இளைஞர் நாய்கள் மீது மிகப் பிரியம் கொண்டவர். தெருவில் சுற்றும் நாய்களை கவனித்து வந்த அபிஜித் அவர்களை பாதுகாக்க வீடு ஒன்று அமைக்க வேண்டும் என்று நினைத்தார். பழைய டிவி பெட்டிகளை சிறிய குடில் போல அமைத்து இடவசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணி அதை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். தெருவில் உள்ள நாய்கள் உணவு இல்லாமல், தங்க இடம் இல்லாமல் தவிக்கும் தெரு நாய்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த இளைஞர் இவ்வாறு செய்ததாக கூறினார்.
இது குளிருக்கு இதமாக இருக்கும். கடந்த ஐந்து வருடங்களாக குப்பையில் வீசப்படும் பயன்படாத 50க்கும் மேற்பட்ட பொருட்கள் பயனுள்ளதாக மாற்றியுள்ளதாக பெருமையுடன் கூறுகிறார். முதலில் அபிஜித் கண்டுபிடிப்புகளை கண்டுகொள்ளாத கிராம மக்கள், தற்போது பாராட்டையும் வரவேற்பையும் தருகின்றனர். மேலும் பழைய பொருள்களை அவரிடம் கொண்டு போய் கொடுக்கின்றனர். சமீபகாலமாக பலரும் செல்லப்பிராணிகளுக்கு உதவி புரிந்து வரும் நிலையில், அசாம் இளைஞர் இவ்வாறு செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.