தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விநியோகம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைனில் மது விற்க மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது.
வழக்கு விவரம்:
சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஊரடங்கால் 43 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதனால், மதுக்கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் ஒரு சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், 6 அடி இடைவெளி விட்டு மக்கள் நிற்க நிபந்தனை விதிக்கப்பட்டது. ஒருவருக்கு ஒரு மதுபாட்டில் மட்டுமே வழங்க வேண்டும். 3 நாட்கள் கழித்து அதே நபருக்கு மீண்டும் 2வது மதுபாட்டில் வழங்க வேண்டும். மேலும், ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே மது வழங்கவேண்டும் என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
நேற்று மதுபான விற்பனை செய்த பல இடங்களில் இந்த நிபந்தனை முழுமையாக கடைபிடிக்கவில்லை. மேலும், மக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு மதுவாங்கிய காட்சிகள் இணையத்தில் வெளியானது. செய்திகளிலும் ஒளிபரபப்பட்டது. இந்த சூழ்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில், மதுவால் பாதிப்பு ஏற்படும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையை முழுமையாக பின்பற்றவில்லை என குற்றம் சாட்டியது.
மதுக்கடைகளை மூட உத்தரவு:
இந்த மனு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மநீம கட்சி சார்பிலும், வழக்கறிஞர் ராஜேஷ் சார்பிலும் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. நீதிமன்றம் பிறப்பித்த விதிகளை அரசு பின்பற்றவில்லை என குற்றம் சாட்டினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளனர். தேவைப்பட்டால் ஆன்லைன் மூலமாகவும், ஹோம் டெலிவரி மூலமாகவும் விற்பனை செய்யலாம் என அனுமதி வழங்கியுள்ளனர்.