அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சிப் பூசல் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் வருகிற 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவின்போது தங்க கவசத்தை யார் அறிவிப்பார் என்ற மோதல் தான் தற்போது அதிக அளவில் இருக்கிறது. ஏனெனில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். அதன் பிறகு அதிமுக கட்சியில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில் அதிமுக கட்சியின் பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் தான் என்று கூறிவரும் ஓபிஎஸ் தனக்கு தான் தங்க கவசத்தை அனுவிக்கும் உரிமை இருக்கிறது என்று கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி தரப்போ திண்டுக்கல் சீனிவாசன் தான் புதிய பொருளாளர் என்பதால் அவருக்கே தங்க கவசத்தை அனுவிக்கும் உரிமை இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இது குறித்து 2 தரப்பினரும் மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து தற்போது அதிமுக கட்சியின் தலைமைக் கழகத்தில் இருந்து முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பி.கே வைரமுத்து, ஆர்.கே ரவிச்சந்திரன், சி. கிருஷ்ணசாமி, பி.ஆர் செந்தில்நாதன், என். கணேச ராஜா, எம்.ஏ முனியசாமி, எம். மணிகண்டன், பாஸ்கரன், முருகையா பாண்டியன், கிருத்திகா முனியசாமி, இசக்கி சுப்பையா, வி.வி ராஜன் செல்லப்பா, வி. கருப்பசாமி பாண்டியன், கே.டி ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி உதயகுமார், கடம்பூர் ராஜு, சி. விஜயபாஸ்கர், ஓ.எஸ் மணியன், காமராஜ், செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அதோடு மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், அனைத்து பேரவைகள், பாசறைகள், சங்கங்கள் ஆகியோரும் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் மட்டும் இடம்பெறவில்லை.
அதாவது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஒன்றாக கலந்து கொண்டால் பிரச்சனை வந்துவிடும் என்று பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்துக்கொண்டு தான் பிரச்சனை வேண்டாம் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் இன்று மதுரை கிளை நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தால்தான் தங்க கவசம் யாருக்கு என்பது தெரிய வரும்.