இந்தியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வருடம் தோறும் வெளியேறுகின்றனர். இப்படி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு படிப்புக்கு தகுந்தார் போல் வேலை கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு அதிகரிக்கிறதா என்று கேட்டால் கட்டாயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பல இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். நாட்டில் பல்வேறு விதமான புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்பை அதிகரித்து தான் வருகிறது. அதன் பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகளும் போட்டி தேர்வின் மூலமாக பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது.
இருப்பினும் கடந்த 2 வருடத்தில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பலர் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி இந்தியாவின் நிலவும் வேலை வாய்ப்பின்மை குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பின்மை என்பது அதிகரித்து உச்ச கட்டத்தில் இருக்கிறது. ஒரு வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். ஆனால் தற்போது கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர் என்றார். மேலும் பாஜக அரசு வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.