உலக அளவில் கடந்த 2020-ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல் படுத்தப் பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இதனால் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் வேலைகளை செய்ய ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்தது. இதனால் உலகில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்கள் வேலைக்கு பணியாளர்களை நியமித்ததோடு அவர்களுக்கு வேண்டிய சம்பள உயர்வு, விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான சலுகைகளையும் கொடுத்தது.
இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் நன்றாக வளர்ச்சி அடைந்தாலும் தற்போது பல நாடுகளில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதால், வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில் செலவினங்களை குறைப்பதற்காக ஐடி நிறுவனங்களும் தற்போது தங்களுடைய ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள இன்டெல் நிறுவனம் 20% ஊழியர்களை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது 1,13,700 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், 22,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் லாபத்தை சமாளிப்பதற்கும், செலவை குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஐடி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.