கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதியில் அதிகாரிகள் திடீர் சோதனை செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுவள்ளிக்குப்பம், தொரவி மற்றும் வெட்டுக்காடு போன்ற கிராமங்களில் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிகாரிகள் அந்த கிராமங்களை தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து ஊரக வளர்ச்சி இயக்குனரான காஞ்சனா பாதிக்கப்பட்ட இடத்திற்கு திடீர் சோதனை மேற்கொண்டுள்ளார்.
அப்போது அவர் குடிநீரில் குழாயில் குளோரின் கலந்து வருகிறதா எனவும், தெருக்களில் தினந்தோறும் தூய்மை பணி நடக்கிறதா எனவும், தினமும் கிருமி நாசினி போடப்படுகிறதா எனவும், பொதுமக்களுக்கு காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை இருக்கிறதா எனவும் ஆய்வு செய்துள்ளார். அதன்பின் ஊராட்சியில் இருந்து சுகாதாரத்துறை சார்பில் கொடுக்கப்படும் நோய் தடுப்பு மாத்திரைகள் மக்களுக்கு முறையாக சென்றடைகிறதா என பொதுமக்களிடம் கேட்டு அறிந்தார். மேலும் கொரோனா குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு கூடிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.