ஓடும் ரெயிலில் 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடிக்க முயன்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்தி பார்க் பகுதியில் ரகுராம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்க நகைகளை தன்னிடம் வேலை செய்யும் மதுரை மேலூர் பகுதியில் வசிக்கும் மாரிமுத்து, அய்யனார் ஆகியோர் மூலமாக கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். இதனால் மாரிமுத்து, அய்யனார் ஆகிய இருவரும் கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நகைகளுடன் புறப்பட்டனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்தக 2 வாலிபர்கள் திடீரென மாரிமுத்து மற்றும் அய்யனாரிடமிருந்து நகைகளை பறித்துள்ளனர். இதனால் அவர்கள் சத்தம் போட்டுள்ளனர். இதனை பார்த்த அருகில் இருந்த பயணிகள் மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் இருவரும் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே காவல்துறையினர் மர்ம நபர்களில் ஒருவர் நீலநிற சட்டை அணிந்திருப்பதாக கூறினர். அதன்படி ரெயில்வே காவல்துறையினர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை சுற்றிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதன் பின் காவல்துறையினர் ஜோலார்பேட்டை பேருந்து நிலையம் அருகில் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கண்ணனூர் பகுதியில் வசிக்கும் அஷ்ரப், சூரஜ் என்பதும், மேலும் அவர்கள் ரகுராம் ஆபரணங்கள் செய்வதற்காக வழக்கமாக கொடுக்கும் பட்டறையின் மூலம் கிடைத்த தகவலின் பேரில் ரெயிலில் மாரிமுத்துவையும், அய்யனாரையும் பின்தொடர்ந்து கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக இருவரும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஜோலார்பேட்டை ரெயில்வே காவல்துறையினர் அஷ்ரப், சூரஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.