மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து வைரலாகப் பரவி வந்த வதந்திக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின் மே 3 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் மே 3க்கு பின் கடுமையான விதிமுறைகளுடன் ஊரடங்கு தள்ளப்படும் அல்லது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பல்வேறு தகவல்களும், வதந்திகளும் பொதுமக்கள் மத்தியில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில்,
அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஓட்டல்கள் தங்கும் விடுதிகள் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு திறக்கப்படாது என்ற செய்தி வேகமாக பரவி வருகிறது. ஆனால் இது உண்மையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதுபோல் எந்த ஒரு அறிவிப்பையும் சுற்றுலாத் துறை அமைச்சகம் வெளியிடவில்லை. ஊரடங்கு தளர்த்தப் படும்போது விடுதிகள், ஹோட்டல்கள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.