Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : 3ஆவது டி20 போட்டி டை ஆனது…. 1-0 என தொடரை வென்ற இந்தியா.!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டி மழையால் டையானதால் இந்திய அணி 1-0 என தொடரை வென்றது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து  நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்தை  65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி இந்திய நேரப்படி மதியம் 12: 30 மணி முதல் மெக்லீன் பார்க்கில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன்  வில்லியம்சன் மருத்துவ காரணங்களுக்காக விலகி உள்ளார். எனவே அனுபவம் வாய்ந்த மூத்த வீரர் டிம் சவுத்தி நியூசிலாந்து அணியை வழி நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது. வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் சேர்க்கப்பட்டார்.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 19.4 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே  49 பந்துகளில் (5 பவுண்டரி, 2 சிக்ஸர்) 59 ரன்களும், பிலிப்ஸ் 33 பந்துகளில் (5 பவுண்டரி, 3 சிக்ஸர்) 54 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்டர்கள் சொல்லும் அளவிற்கு ரன்கள் சேர்க்கவில்லை.. இந்திய அணியில் முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், ஹர்ஷல் படேல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக களம் இறங்கிய இஷான் கிஷன் 10, ரிஷப் பன்ட் 11, சூர்யகுமார் யாதவ் 13, ஷ்ரேயஸ் ஐயர் 0 என அவுட்டாகினர். பின் ஹர்திக் பாண்டியா – தீபக் ஹூடா இருவரும் சேர்ந்து விளையாடி வந்தனர். இந்திய அணி 9 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழந்து 75 ரன்கள் எடுத்திருந்தது. ஹர்திக் பாண்டியா அதிரடியாக 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல தீபக் ஹூடா 9 ரன் எடுத்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.

நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளும், ஆடம் மில்னே மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து மழையால் போட்டி கைவிடப்பட்டது. டக்வோர்த் லூயிஸ்  முறைப்படி இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது.. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 3 போட்டியில் கொண்ட தொடரை 1:0 என இந்தியா வென்றது..

Categories

Tech |