இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி..
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி இந்திய நேரப்படி மதியம் 12: 30 மணி முதல் மெக்லீன் பார்க்கில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மருத்துவ காரணங்களுக்காக விலகி உள்ளார். எனவே அனுபவம் வாய்ந்த மூத்த வீரர் டிம் சவுத்தி நியூசிலாந்து அணியை வழி நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது. வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் சேர்க்கப்பட்டார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் கான்வே இருவரும் களமிறங்கினர். இதில் பின் ஆலன் 3 ரன்னில் அவுட் ஆனார். இதை எடுத்து மார்க் ஜோடி சேர்ந்து சிறிது நேரம் தாக்குபிடித்து நிலையில் மார்க் சாப்மேன் 12 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து கான்வே மற்றும் கிளன் பிலிப்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில், பிலிப்ஸ் 33 பந்துகளில் (5 பவுண்டரி, 3 சிக்ஸர்) 54 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அப்போது அணியின் ஸ்கோர் 15.5 ஓவரில் 130/3 ஆக இருந்தது. அவரை தொடர்ந்து கான்வேயும் 17ஆவது ஓவரில் 49 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன்பின் யாரும் கடைசி நேரத்தில் அதிரடியை காட்ட முடியவில்லை. ஜிம்மி நீசம் 0, மிட்செல் சான்ட்னர் 1, என அடுத்தடுத்து அவுட் ஆகினர். மேலும் அர்ஷ்தீப் சிங் வீசிய 19ஆவது ஓவரில் டேரில் மிட்செல் 10, இஷ் சோதி 0, ஆடம் மில்னே 0 (ரன் அவுட்) என தொடர்ந்து விக்கெட்டை விட்டனர். கடைசி ஓவரில் சவுத்தி 6 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் 19.4 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது நியூசிலாந்து அணி. லாக்கி பெர்குசன் 5 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணியில் முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், ஹர்ஷல் படேல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.