வால்பாறை பகுதியில் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை பகுதியில் இருந்து வால்பாறை செல்லும் சாலை வரை இருக்கும் பகுதிகளில் சிங்கவால் குரங்குகள், வரையாடுகள் மற்றும் சாதாரண குரங்குகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த மலைப் பாதையில் செல்லும் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு தின்பண்டம் கொடுப்பது வழக்கம். ஆனால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதால் வால்பாறைக்கு யாரும் செல்வதில்லை.
இதனால் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, தின்பண்டங்களை கொடுத்து பழகியதால் சுற்றுலாப்பயணிகளின் வருகைக்காக சாலையோரத்தில் காத்திருந்த குரங்குகள் தற்போது யாரும் வராத காரணத்தினால் வனப்பகுதிக்குள் உணவை தேடி செல்கின்றன. இதனால் அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்படுகிறது.
இந்த நிலை தொடர்ந்தால் குரங்குகள் வனப்பகுதிக்குள் சென்று தனக்கான உணவை தேடிக் கொள்ளும். எனவே வால்பாறைக்கு செல்லும்போது குரங்குகளை பார்த்தால் பொதுமக்கள் தின்பண்டங்கள் வழங்க அனுமதிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விதிமுறைகளை மீறி குரங்குகளுக்கு தின்பண்டம் வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.