Categories
தேசிய செய்திகள்

ஜூலையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு…தேதியை அறிவித்தது மத்திய அரசு

ஜூலை 26ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இன்று ஜேஇஇ(JEE) முதன்மை மற்றும் நீட் தேர்வு தேதிகளை அறிவித்தார். ஜூலை 19 முதல் ஜூலை 23 வரை பல அமர்வுகளில் ஜேஇஇ(JEE) மெயின் தேர்வுகள் நடைபெறும் என்றும், நீட் தேர்வு அதாவது மருத்துவ நுழைவு சோதனை தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடத்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகளை தவிர்த்து பிற வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமல் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டனர். மேலும், கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில், நுழைவுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

தற்போது, நீட் தேர்வு மற்றும் ஜெஇஇ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஜூலை மாதம் தேர்வுகளை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. அதேபோல், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு தேதிகள் இந்த வாரம் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |