இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் நடப்பு ஆண்டில் நடைபெற சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு எனப்படும் NPRல் திருத்தம் மேற்கொள்ளும் பணிகளை இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 30ஆம் தேதி வரை முதல்கட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது.
கொரோனா பெரும் தொற்று காரணமாக இப்பணிகள் தடைப்பட்டது. கொரோனா பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிவரும் நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் இந்த ஆண்டு முழுமைக்கும் நடைபெற வாய்ப்பில்லை என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இப்பணிகளில் லட்சக் கணக்கான ஊழியர்கள் ஈடுபட வேண்டியிருப்பதால் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கணக்கெடுப்பதில் உள்ள சுகாதார அபாயத்தை குறைத்து மதிப்பிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.