இந்தாண்டு ஆஸ்திரேலியாவிலும், அடுத்தாண்டு இந்தியாவிலும் நடைபெறும் அடுத்தடுத்த இரண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் தான் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருப்பேன் என இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஐசிசியின் விதிமுறைப்படி கடந்த ஆண்டு தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது. கிரிக்கெட்டை கண்டுப்பிடித்த நாடு இதுவரை உலகக் கோப்பை வெல்லவில்லையே என்ற பேச்சுக்கும் மோர்கன் அண்ட் கோ முற்றுப்புள்ளி வைத்தது.
இதைத்தொடர்ந்து, வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. அதன்பின் 2021இல் டி20 உலகக் கோப்பை தொடரும், 2023இல் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரும் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
2019 உலகக் கோப்பை தொடரை போலவே இந்த தொடர்களிலும் மோர்கன் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு அணியை வெற்றிபெற வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 33 வயதான மோர்கன், 2023 உலகக் கோப்பையில் பங்கேற்கும்போது அவர் 36 வயதை எட்டியிருப்பார்.
இந்நிலையில், இது குறித்து அவர் பேசுகையில்,
“2019 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்வதே எங்களது இலக்காக இருந்தது. நாங்கள் அந்த இலக்கை அடைய முடிந்தது நம்ப முடியாத உணர்வாகும். 2023 உலகக் கோப்பை நடைபெற இன்னும் போதிய காலம் இருப்பதால் அதை பற்றி நான் சிந்திக்கவில்லை. தற்போதைக்கு இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை கைப்பற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறேன். அதன் பின் 2021 உலகக் கோப்பை தொடரிலும் விளையாடுவேன்.
இந்த இரண்டு டி20 உலகக் கோப்பையில் நான் கேப்டனாக இருப்பேன் என நம்புகிறேன். கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக நான் பேட்டிங்கில் சிறப்பான ஃபார்மில் இருப்பதாக நினைக்கிறேன்.”
முன்னதாக, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த மோர்கன், இம்முறை கேப்டனாக இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது உலகக் கோப்பையை பெற்றுத்தருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.