ராமநாதபுரத்தில் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு முன்பே கொரோனாவால் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கவரங்குளம் பகுதியில் கோகுல்நாத்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி ராதிகா இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ராதிகா மீண்டும் கர்பமாகியுள்ள நிலையில் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கோகுல்நாத்தின் தந்தைக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கோகுல் அவரை கவனித்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து தந்தை குணமாகி வீடு திரும்பிய நிலையில் கோகுலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் இராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையில் கோகுலின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியதும் தன் குழந்தையை பார்க்க வேண்டும் என மிகுந்த ஆசையில் இருந்துள்ளார். ஆனால் நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி கோகுல்நாத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் கோகுல் கொரோனாவால் உயிரிழந்ததால் அவருடைய மனைவி ராதிகாவையும் பார்க்க அனுமதியளிக்கவில்லை. இதையடுத்து அவரின் உடல் ராமநாதபுரம் அரசு காட்டிய அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.