தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஆன்லைன் ரம்பியை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மியால் பலர் தங்களுடைய வாழ்க்கை மற்றும் உயிரை இழந்துள்ளனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மியால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தன்னுடைய பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய மாணவர் வீட்டில் இருந்த 2 கிராம் மோதிரத்தையும் அடகு வைத்து ரம்மி விளையாடியுள்ளார். ஆனால் கடைசியில் விரக்தி அடைந்த மாணவர் தன்னுடைய உயிரையே மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆன்லைன் சூதாட்டத்தில் இனிமேல் யாருமே உயிரிழக்க கூடாது. எனவே தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி அவசர தடைச் சட்டத்திற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.