அமெரிக்கா, வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
வட கொரியா, அமெரிக்காவுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து பிற நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அதன்படி, வடகொரியா கடந்த ஜனவரி மாதத்தில் தொடர்ச்சியாக சுமார் எழு தடவை ஏவுகணை சோதனைகளை செய்திருக்கிறது.
மேலும், கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி அன்று கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை வடகொரியா சோதனை செய்திருக்கிறது. இந்நிலையில் மீண்டும் வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை செய்திருப்பதாக தென்கொரிய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த ஏவுகணை சோதனையானது, அந்நாட்டின் தலைநகரான பியாங்யாங்கில் நடந்தது என்றும் 560 கிலோமீட்டர் உயரத்திற்கு சுமார் 270 கிலோமீட்டர் தொலைவில் அந்த ஏவுகணை பறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா, வடகொரியாவின் இந்த செயலை கடுமையாக எதிர்த்துள்ளது. மேலும், இவ்வாறு பிராந்தியத்தின் அமைதியையும், நிலைத்தன்மையும் சீர்குலைக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்று வடகொரியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.