கேரளாவில் பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ள காரணத்தினால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு என்று அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அளவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு தினசரி தொற்று எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டுகிறது. மேலும் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக கேரளாவில் 9 நாட்கள் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டது. மேலும் ஊரடங்கு காலத்தில் யாரும் பசியுடன் இருக்க கூடாது என்பதற்காக அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருந்தார். அதேபோன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இலவச உணவு வினியோகிக்கப்படும் எனவும் தற்போது கேரள அரசு அறிவித்துள்ளது.