வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்குத் திரும்பிய ஊழியர்கள் அனுமதிக்கப்படாததால் தெலங்கானாவில் பதற்றம் நிலவிவருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த 52 நாட்களாக, போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர்.
நவம்பர் 5ஆம் தேதிக்குள் போராட்டத்தை நிறுத்தி வேலைக்குத் திரும்ப வேண்டும், இல்லையெனில் அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்தார். இருந்தும், போராட்டம் தொடர்ந்தது. இதனிடையே நேற்று ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று பணிக்குத் திரும்பினர். ஆனால், அவர்களை பணிக்குத் திரும்பவிடாமல் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். அனைத்து பணிமனைகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தற்காலிக ஊழியர்கள் மட்டும் பணிமனைக்கு உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர். இதனால், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிமனைகளில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.
இதுகுறித்து போக்குவரத்து கழகம், “இந்தப் பிரச்னையை தொழிலாளர் ஆணையம் விசாரித்து வருவதால், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்” என அறிவித்துள்ளது.