கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சிவி கணேசன், கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு அமைச்சர் சிவி கணேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 1,07,000 தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தந்துள்ளோம். நவம்பர் 27-ம் தேதி பொள்ளாச்சியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் வேலை இல்லாத நிலை நிலை என்பதை உருவாக்க வேண்டும் என்பதற்காக தான் தமிழக முதல்வர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தருவோம் என்ற நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்போது மழை நீரால் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வருடம் கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் இந்த வருடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 32 வாய்க்கால் பணிகள் முடிவடைந்துள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் மழைநீர் தேங்காத அளவுக்கு பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இங்கு வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்த போதிலும் கூட அதிக அளவில் பாதிப்பு இல்லை. மோட்டார்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதோடு, மாவட்ட ஆட்சியர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் தொடர்ந்து மழை பாதிப்புகளை கண்காணித்து வருகிறார்கள். தமிழகத்தில் மழையின் காரணமாக எந்த இடத்திலும் மின்வெட்டு ஏற்படவில்லை. 11 ஆயிரம் சிறப்பு அதிகாரிகள் மின்வாரியத்துறையில் தற்காலிக பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 10 வருடங்களாக மின் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாத நிலையில் தற்போது தான் ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் சிறு, குறு தொழில்களுக்கு குறைந்த அளவில் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 5 வருடங்களாக எவ்வித சாலையும் போடப்படாத நிலையில் தற்போது தான் மாநகராட்சி மூலம் சாலைகள் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக சிறப்பு நிதி 200 கோடி ரூபாயிலிருந்து 26 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப் பட்டுள்ளது. வருகிற மார்ச் மாதத்திற்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டு விடும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியின் பாடப்பதிவேட்டில் ஜாதி பெயர் இடம் பெற்றிருந்தது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.