கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், 51-வது ஆண்டு பொன்விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது எஸ்.பி வேலுமணி பேசியதாவது, அதிமுக கட்சியானதுனது கடந்த 50 வருடங்களில் ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளது. 31 வருட ஆட்சியில் பொது மக்களுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் அதிமுகவின் 51-வது ஆண்டு பொன்விழாவை ஒரு பெரிய மாநாடு போன்று நடத்த வேண்டும். ஆளுங்கட்சியின் மீது பொதுமக்களுக்கு எதிர்ப்பு இருப்பதால் கண்டிப்பாக கூட்டத்திற்கு ஏராளமான மக்கள் வருவார்கள்.
கோயம்புத்தூரில் கூட்டம் நடத்தினால் திமுக ஆட்சி பறிபோய்விடும் என்பது கருணாநிதி காலத்திலிருந்து சொல்லப்படுகிறது என்றார். இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒவ்வொரு குடும்பத்திலும் அதிமுக கட்சி கொண்டு வந்த நலத்திட்டங்கள் இருக்கிறது. திமுக எந்த ஒரு நலத்திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தற்போது நடைபெறுகின்ற ஆட்சியை மக்கள் விரும்பாததால் கூடிய விரைவில் அவர்களை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் 40 தொகுதிகளிலும் எடப்பாடியாரே வெற்றி பெறுவார். தற்போது கூட எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்திருக்கலாம் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர்.
தமிழகத்தில் இந்தி மொழி விவகாரத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று பாஜக தெளிவு படுத்தியுள்ளது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் நடத்தப்படும் இந்தி பாடங்களை எடுக்க சொல்ல வேண்டும். நாளை கோவைக்கு மத்திய விவசாயத்துறை மந்திரி வருகிறார். அவரை சந்தித்து கொப்பரை தேங்காய் மற்றும் உரம் தொடர்பாக மனு கொடுக்கப்படும். தமிழகத்தில் 39 எம்பிக்களும் எதுவுமே செய்யவில்லை. அவர்களை கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலையில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். திமுக கட்சியினரும் முதல்வருக்கு கட்டுப்படாதவர்களாக இருக்கிறார்கள் என்றார்.