விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அத்திக்கோயில் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய காவல்துறையினர், கள்ளச்சாராயம் காய்ச்சிய ராமர், வெயில்முத்து, ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்த பொருட்கள் மட்டும் 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தப்பியோடிய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இதேபோல, ஊரடங்கை பயன்படுத்தி கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டதாக 402 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 5,900 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி வருகின்றனர்.
இந்த நிலையில், கடலூர் முதுநகர் பகுதியில் வாழை மற்றும் கரும்பு பயிர் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் கள்ளச்சாராய ஊறல் போட்டு சாராயம் காய்ச்சியது தெரியவந்துள்ளது. இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,400 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.