இன்று நடைபெற உள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், குடியுரிமை திருத்த மசோதா சட்டம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் இவ்வேளையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகளை அடியோடு அழிக்க பார்க்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
இதுவரை தமிழகத்தில் 341 க்கும் மேற்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டுவதற்கான 20,000 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியும், பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் தேவையில்லை என்று மத்திய அரசு கூறி,
சுற்றுச்சூழலையும் பாமர மக்களின் எண்ணத்தையும் சிறுமைபடுத்தியதற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அதிமுக அரசும் மத்திய அரசோடு சேர்ந்து இதுவரை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும், இதுவரை மாவட்ட ஆட்சியர்களுக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தாமல் தடுக்குமாறு அறிவுரை கூட வழங்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது என்றும்,
மத்திய அரசோடு சேர்ந்து கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளுடன் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக கைகொடுப்பது வேளாண் தொழிலை அடியோடு அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கு சமம். ஆகையால் இன்று கூடவிருக்கும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.