கடந்த 7 நாட்களாக சுமார் 80 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இன்று பயோடெக்னாலஜி துறையின் தன்னாட்சி நிறுவனத்துடன் காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் உரையாடல் நடத்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது, ” கடந்த 14 நாட்களில், நாட்டில் கொரோனா பாதிப்பின் இரட்டிப்பு விகிதம் 8.7 ஆகவும், கடந்த 7 நாட்களுக்கு இது 10.2 நாட்களாகவும் உள்ளது. கடந்த 3 நாட்களில், இது தோராயமாக 10.9 நாட்களாக இருக்கிறது என கூறினார்.
அதேபோல, கடந்த 14 நாட்களில் சுமார் 47 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார். கடந்த 21 நாட்களில் 39 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வழக்கு பதிவு செய்யப்படவில்லை. கடந்த 28 நாட்களாக 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா யாருக்கும் இல்லை ” என புள்ளிவிவரங்களை வெளியிட்டார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை தாண்டியது.
நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்று நாட்டில் கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.