தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – 3, காஞ்சிபுரம் – 2, தஞ்சாவூர் – 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், நாகை, விழுப்புரத்தில் தலா ஒருவரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இன்று 98 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இதுவரை 1,29,365 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 9,365 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது 1183 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 31,375 பேரும், அரசு கண்காணிப்பில் 40 பேரும் உள்ளனர்.