Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியது. கடந்த 12 வருடமாக ஓமனில் பணியாற்றும் இவர் 10 நாட்களுக்கு முன்னர் இந்தியா வந்துள்ளார். வைரஸ் பாதிக்கப்பட்ட இந்த நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வந்த இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. வறட்டு இருமல், சளி தொல்லை இருந்துள்ளது இதையடுத்து இவர் சிகிச்சைக்காக காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதில் கொரோனா இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதால் அவரின் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன்பின்தான் தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட தொடங்கியது. அவரை உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். மேலும் இவருடன் தொடர்புடைய 7 பேர் உட்பட மொத்தம் 8 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் நெகடிவ் முடிவு வந்ததால் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபருக்கு கொரோனா வைரஸ் குணமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவில் இருந்து குணப்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் இளைஞர் இன்னும் 14 நாட்கள் கண்காணிப்பில் இருப்பார். கொரோனா அறிகுறி இருந்த யாருக்கும் வைரஸ் தாக்கவில்லை. எல்லா ரத்த மாதிரிகளும் சோதனை செய்யப்பட்டுவிட்டது. பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் எதுவும் நிலுவையில் இல்லை என தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |