கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அவர் வாக்களித்துள்ளார். மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்களின் உயிரைக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களை துன்புறுத்தினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருந்தார். மேலும், சிறை தண்டனையுடன் ரூ. 1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபாதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மருத்துவ பணியாளர்களின் வாகனமோ, கிளினிக்குக்ளோ சேதப்படுத்தப்பட்டால், சந்தை மதிப்பை விட இரு மடங்கு தொகை இழப்பீடாக அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா வைரசுக்கு எதிராக டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் துணிவுடன் போராடி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம். அவர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என பதிவிட்டுள்ளார்.