திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். இவருக்கு டிசம்பர் 14-ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது. அதன் பிறகு அமைச்சராகும் உதயநிதிக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது 2 துறைகள் அவரிடம் கொடுக்கப் படலாம் என்று கூறப்படுகிறது.
அதாவது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையுடன் சேர்ந்து அமைச்சர் மெய்யநாதன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையையும் கவனித்து வருகிறார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை உதயநிதிக்கு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதேபோன்று தற்போது முதல்வர் ஸ்டாலினின் வசம் இருக்கும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறையும் உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் உச்சவரம்பின் படி 35 அமைச்சர்கள் தாண்டக்கூடாது என்பதால் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறகு வேறு யாரும் அமைச்சராக பொறுப்பேற்க மாட்டார்கள்.
ஒருவேளை புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றால் அமைச்சரவையை மாற்ற தான் வேண்டும். இதனையடுத்து தலைமைச் செயலகத்தில் இறையன்பு ஐஏஎஸ் அறைக்கு பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் அறை தயாராகி வரும் நிலையில், இன்று மாலை பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து விடும். மேலும் கருணாநிதி எம்எல்ஏவாக பதவியேற்று 10 வருடங்கள் கழித்து தான் அமைச்சராக பொறுப்பேற்றார். இதேபோன்று ஸ்டாலினும் எம்எல்ஏவாக பொறுப்பேற்று 17 வருடங்கள் கழித்து தான் அமைச்சரானார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் மட்டும் எம்எல்ஏவாக பொறுப்பேற்ற 19 மாதங்களிலேயே அமைச்சராக போகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.