தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை தாலுகா அச்சங்குளம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 28 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 25 நபர்கள் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய நிவாரண உதவி கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் மத்திய அரசு நிவாரண உதவி வழங்கப்படாத நிலை இருக்கின்றது. மேலும் ஆலை உரிமையாளர் வழங்கிய காசோலைகள் 25 நபர்களுக்கு வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது.
இதனையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு அதன் தன்மையை பொறுத்து 10 லட்சம் ரூபாய் வரையும் நிவாரண நிதி வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டது. ஆகவே பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவின்படி நிவாரணம் வழங்கவும், ஆலை உரிமையாளர் வழங்கிய காசோலைக்கு பணம் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.