மக்களின் இயல்பு வாழ்க்கை மழையினால் பாதிக்கப்பட்டதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த 10 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வீடூர் அணை, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது.
மேலும் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த பேரிடரினால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதுபோன்ற சூழலில் காங்கிரஸ் ஆட்சியில் உருவான போது அனைத்து துறைகளும் இணைந்து செயல்புரிந்தன. ஆனால் தற்போது உள்ள என். ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க ஆட்சியில் பேரிடர் மேலாண்மைக்குழு இருக்கிறதா என்பது சந்தேகமே. ஏனெனில் இதுவரை எந்தவொரு கூட்டமும் மக்களின் பாதிப்புகளை தெரிவிப்பதற்கு அமைக்கப்படவில்லை.
குறிப்பாக புதுச்சேரியில் இது போன்றதொரு பரிதாபமான நிலை உருவாகியுள்ளது. மேலும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு இது குறித்து எந்தவொரு கவலையும் இல்லை. அவர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நேரில் சென்று ஆராயவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளுக்கும் ஆணை பிறப்பிக்கவில்லை. அதிலும் வங்க கடலில் உருவாகியுள்ள புயலால் வருகின்ற 10 ஆம் தேதிக்கு மேல் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதற்கான பணிகளை செய்ய மாநில நிர்வாகம் தயாராகவில்லை. இதனால் காலரா போன்ற தொற்று நோய்கள் அதிக பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக சுகாதாரத்துறையை தீவிரமாக தயார்படுத்த வேண்டும். ஆனால் இந்த இடத்தில் மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இந்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5,000 ரூபாய் வழங்க வேண்டும். இதற்கிடையில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்பதால் உள்ளாட்சி தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் மூன்று மாத காலத்திற்குள் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
அதன் பின்புதான் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்க வேண்டும். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். ஆனால் எங்கள் ஆட்சி காலத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி வழங்க கூடாது என்று அப்பொழுது இருந்த ஆளுநர் தடை விதித்திருந்தார். அவருக்கு எதிராக நாங்கள் மத்திய அரசிடம் புகார் அளித்திருந்தோம்.
ஆனால் அவர் ரேஷன் பொருட்களுக்கு பதிலாக நிதியை வழங்குமாறு வலியுறுத்தினார். ஆனால் தற்போதுள்ள என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி ரேஷன் கடைகளை திறந்து அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை வழங்க தீர்மானம் செய்துள்ளார். இதற்கு ஆளுநர் அவர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதனை தான் எங்கள் ஆட்சியின் போது செய்ய கூறினோம். ஆனால் ஆளுநர் மத்திய அரசின் உத்தரவை மீறினார். இதற்கு மத்தியில் பெட்ரோல் டீசல் போன்ற எரிப்பொருட்களின் விலை நாடு முழுவதும் குறைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் இடைத் தேர்தலில் பா.ஜ.க தோல்வி அடைந்தது தான்.
அதிலும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியபோது கட்டணத்தை குறைக்காத மத்திய அரசு தற்போது குறைத்துள்ளது. இருப்பினும் அதனை முழுமையாக குறைக்கவில்லை. குறிப்பாக ஒரு லிட்டர் பெட்ரோல் 30 ரூபாயும் ஒரு லிட்டர் டீசல் 35 ரூபாயும் குறைக்கப்பட வேண்டும். இருப்பினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மாநில அரசின் மீது குற்றம் சாட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.