சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் 3ம் கட்ட அறிவிப்புகளை இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார்.
பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார். முதல் நாளில் சிறுகுறு தொழிலுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
நேற்று வேளாண் துறை மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் புதிய அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட உள்ளார். 3வது நாளாக இன்றும் ரூ.20 லட்சம் கோடி திட்டம் குறித்து விளக்கம் அளிக்க உள்ளார். பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழிநுட்பம், மக்கள் சக்தி, தேவைகள் ஆகிய 5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடியிலான திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
சிறு,குறு நிறுவனங்கள் தொழிலை விரிவுபடுத்த ரூ.10,000 கோடி கடன் வழங்கப்படும். மின்வாரியங்ளுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். வங்கி சேவை இல்லாத நிதி நிறுவனங்களுக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடுத்த 2 மாதத்துக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட உள்ளார்.