சூட் கேஸ் தூக்கும் அரசியலை மோடி அரசு செய்வதில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் பதவியேற்றதை அடுத்து ஜூன் மாதம் 17ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. பின் ஜூலை 5ஆம் தேதி இவ்வாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ஜூலை 18ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் 26 ஆம் தேதி வரை நடைபெற இருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர், ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சென்னையில் பட்ஜெட் தாக்கல் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு கிடையாது என்றும், சூட்கேஸ் கொடுத்து வாங்கும் அரசியல் மோடி அரசிடம் இல்லை என்றும் தெரிவித்த அவர், பட்ஜெட் அறிக்கையை வெல்வெட் துணியில் எடுத்து வந்ததை உதாரணமாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் இளைஞர்கள் தொழில் செய்வதே நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.