5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்த உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் 18ம் தேதி வெளியாகும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மேலும் பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,
சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் உள்ளதாக அறிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடியிலான ‘தன்னிறைவு இந்தியா’ திட்டம் உருவாக்கபட்டுள்ளதாகவும், சுய சார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் 5 முக்கிய தூண்களாக பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழிநுட்பம், மக்கள் சக்தி, தேவைகள் உள்ளது என தகவல் அளித்துள்ளார்.