ஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என கூறியுள்ளார்.
பொது முடக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள் பாதிக்கப்பட்டிருப்பதை அரசு உணர்ந்துள்ளது என தெரிவித்த அவர், நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு 48 லட்சம் டன் உணவு தானியம் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.52000 கோடி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுகாதார ஊழியருக்கும் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை பன்முகத்தன்மை கொண்ட யோஜனா வழங்கியுள்ளது என தகவல் அளித்துள்ளார்.
ரூ.69 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக சிறப்பு பொருளாதாரம் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவோம் என தெரிவித்த அவர், ரூ. 52,606 கோடி ரூபாய் 41 கோடி ஜன் தன் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 71,700 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் பல்வேறு மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ரூ. 41 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் பிரதம மந்திரியின் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் போன்றவை இந்த காலத்தில் கைகொடுத்துள்ளன, பிரதான் மந்திரி கிசான் திட்டம், நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு முடக்க காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.