நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனையில் விவசாயி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலத்திருப்பூந்துருத்தி ஆதிதிராவிடர் தெருவில் விவசாயி பாலமுருகன் வசித்து வந்தார். இவர் கண்டியூர் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தினை ஒத்திகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் அந்த நிலத்தில் பாலமுருகன் நெல் நடவு செய்து இருந்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பாலமுருகன் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த பாலமுருகன் வயலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு வெளியில் சென்றார்.
இந்தநிலையில் பாலமுருகன் தனது வயலில் இறந்து கிடந்தார். இதனை அறிந்த பாலமுருகனின் மனைவி மரகதம் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதுதொடர்பாக மரகதம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலமுருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.