ரவுடி கொலை வழக்கில் 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவி தாண்டலம் கிராமம் எட்டியம்மன் கோவில் தெருவில் குட்டியின் மகன் தமிழ்வேந்தன் வசித்து வந்துள்ளார். இவர் மீது சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலையங்களில் கொலை, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகள் இருக்கின்றது. இந்நிலையில் காவி தாண்டலம் கிராமத்தின் அருகில் வயல்வெளியில் தமிழ்வேந்தனை யாரோ மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழ்வேந்தன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலையினால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டதால் அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். மேலும் அந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அது சம்பவம் நடந்த இடத்திலேயே சுற்றி சுற்றி வந்து நின்றது. இதனால் இந்த கொலை வழக்கு முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு எதுவும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வசீகரன், நிஷாந்த், சரண்ராஜ் ஆகிய 3 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில், “தனக்கும் தமிழ்வேந்தனுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி இருந்ததாகவும், இதில் தமிழ்வேந்தன் என்னை தீர்த்து கட்டுவதாக சொன்னதால் நான் என்னுடைய நண்பர்கள் நிஷாந்த், சரண்ராஜ் ஆகியோருடன் தமிழ்வேந்தனிடம் சமரசம் பேசி மது அருந்தலாம் என்று கூறி வயல் வெளிக்கு அழைத்துச் சென்று அங்கு கத்தியால் வெட்டி கொலை செய்தேன் என்று வசீகரன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்”. மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வசீகரன், நிஷாந்த், சரண்ராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.