நிலக்கரி ஏற்றி வந்த லாரி வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.ஏ.எஸ். நகரில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மில் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் மில்லிற்கு தேவையான நிலக்கரி லாரியில் ஏற்றப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து புறப்பட்டது. அந்த லாரியை டிரைவர் குமார் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து லாரி கே.ஏ.எஸ். நகர் அருகே ஓடும் காலிங்கராயன் வாய்க்கால் கரையின் மண் சாலையில் வந்து கொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக வாய்க்கால் கரை, மண் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருந்தது.
இதன் காரணமாக டிரைவர் சக்கரம் சகதியில் சிக்காமல் இருக்க மண் சாலையில் காலிங்கராயன் வாய்க்கால் கரையின் ஓரம் லாரியை ஓட்டி வந்தார். அப்போது சக்கரம் சேற்றில் சிக்கியதோடு டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் லாரியில் இருந்த நிலக்கரி முழுவதும் வயலில் கொட்டியது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் பொக்லைன் எந்திரத்தின் மூலம் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்கும் பணி நடைபெற்றது.