நிலச்சரிவில் சிக்கியிருந்தவர்களை மீட்புக்குழுவினர் காப்பாற்றி பாதுகாப்பான இடங்களில் சேர்த்துள்ளனர்.
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகனங்களில் வந்த பயணிகள் சாலையில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்புக்குழுவினர் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் கொண்டு சேர்த்துள்ளனர்.
குறிப்பாக Cory Lysohirka என்பவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களின் காருக்கு முன்னாலும் பின்னாலும் நிலச்சரிவு ஏற்பட்டு அதில் மொத்த குடும்பமே சிக்கியுள்ளது. இதன் பின்னர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நேற்று மதியம் சுமார் 275 பேர் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதிலும் ஐம்பது குழந்தைகள் மற்றும் இருபது நாய்கள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த பேரிடரினால் எவருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எவரேனும் நிலச்சரிவில் சிக்கியிருக்கிறார்களா என்பதை கண்டறிய மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.